சமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்தம் தேவையற்றது

புதுடில்லி: “சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன’ என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார்.

பின்னர், இது தன் தனிப்பட்ட கருத்து என்றும் அரசின் கருத்து அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சட்டத் திருத்தத்தை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ ரத்து செய்தது. இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை நீதிபதிகள் பாஞ்சால், தீபக்வர்மா, சவுகான் அடங்கிய “பெஞ்ச்’ விசாரித்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று வாதம் நடந்தது. தமிழக அரசு சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் ஆஜராகி, “”தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இது தேவையில்லை என வலுவான, உறுதியான சட்ட ஆலோசனைகளை அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தால், இது நடந்திருக்காது” என்றார்.
மாலையில் தனது வாதத்தை தெளிவுபடுத்தினார். “”காலையில் தான் தெரிவித்த கருத்து தனிப்பட்ட முறையிலானது. மாநில அரசின் கருத்து அல்ல” என மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் தெளிவுபடுத்தினார். அவர் வாதாடும் போது, “”சமச்சீர் கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிய பின், ஓராண்டில் அதை தமிழக அரசு அமல்படுத்தும். உலக அளவிலான மாணவர்களுடன் போட்டியிடும் விதத்தில் தமிழக மாணவர்கள் தகுதி பெற வேண்டும் என்றும், குறைகளை நீக்கி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதத்தில், இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதை தமிழக முதல்வர் ஜெயலலிதா தள்ளிவைத்துள்ளார்” என்றார். அப்போது, “”ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டிய சந்தர்ப்பம் ஏன் ஏற்பட்டது?” என, நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், “”கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், சில உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த தீர்ப்பில், நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின், 2011-12ம் ஆண்டில் அல்லது அதற்குப் பின் சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தலாம் என தெளிவாக கூறியுள்ளது” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “”ஐகோர்ட் பிறப்பித்த முந்தைய உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என நீங்கள் கூறும் போது, இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இல்லாத சட்டத்தை இப்போது நீங்கள் அமல்படுத்த முடியாது” என்றனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், “”சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டாம் என வலுவான, உறுதியான சட்ட ஆலோசனைகள் வழங்கப்படவில்லை. தேவையற்ற விஷயங்களை செய்ததால், தேவையில்லாமல் தற்போது பிரச்னையில் நாங்கள் சிக்கியிருப்பது உண்மை தான்” என்றார்.

பின், மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடியதாவது: சட்டத் திருத்தத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. பாடத் திட்டத்தில் குறைபாடு உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் என, பள்ளிகள் தரப்பில் அரசுக்கு மனுக்கள் வந்தன. எனவே, ஒரு குழுவை அமைத்து பாடத் திட்டங்களை ஆய்வு செய்வது என்றும் அதை சரிசெய்த பின், அமல்படுத்துவது என்றும் அரசு முடிவெடுத்தது. சட்டத் திருத்தம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறிய பின், இதில் அரசியல் என்ற கேள்வி எழவில்லை. சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது. பல்வேறு அம்சங்களை பூர்த்தி செய்த பின், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துவோம். சட்டத்தில் கூறியபடி, கல்வி ஆணையம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பாணை பிறப்பிக்கப்படும். மத்திய சட்டத்தில் கூறியபடி, மாநில ஆலோசனை கவுன்சில் ஒரு வாரத்தில் அமைக்கப்படும். கற்பிப்பதற்கான விதிமுறைகள் நிர்ணயம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-மாணவர் விகிதம், கற்பிப்பு மற்றும் பயில்வதற்கான பொருட்கள், சாதனங்கள், உள்ளிட்டவற்றை ஒரு வாரத்தில் ஏற்படுத்துவோம். பாடத் திட்டம், பாடப் புத்தகங்கள் தயாரிப்பது, பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஒரு வாரத்திலும், பாடத் திட்டம் வடிவமைப்பது இரண்டு மாதங்களிலும் நடக்கும். இவை செப்டம்பரில் முடிக்கப்படும். பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்ட பின், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெறுவதற்காக வெப்சைட்டில் நகல் பாடத் திட்டம் வெளியிடப்படும். கருத்துக்கள், பரிந்துரைகளைப் பெற்று இரண்டு வாரங்களில் பாடத் திட்டம் இறுதி செய்யப்படும். அதன்பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை தயாரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது நான்கு மாதங்களில் நடத்தப்பட்டு, ஜனவரியில் முடிக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பாடப் புத்தகங்களை அரசு மற்றும் தனியார் பதிப்பாளர்கள் மே மாதத்துக்குள் அச்சிட்டு விடுவர். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார். வழக்கறிஞரின் வாதம் இன்றும் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *