பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.

கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர், 1991 முதல், 1996 வரையிலான கால கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என, சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதில், சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து, தனக்கு விலக்கு அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார்.

இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி கோருவதன் மூலம், வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா முற்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் அனைத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. எந்த தேதியில் சிறப்பு கோர்ட்டில் ஆஜராக, ஜெயலலிதா விரும்புகிறார் என்பதை, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கேட்டு, இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அப்படி ஜெயலலிதா, அவர் தேர்வு செய்யும் நாளில் ஆஜராகும் போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யும்படி, சிறப்பு கோர்ட்டிற்கு உத்தரவிடவும் நாங்கள் தயார். வழக்கு விசாரணையை அடுத்த ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “”வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்க அளிக்க வேண்டும் எனக்கோரி, ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் தவறு செய்து விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 313 (5)வது பிரிவு அனுமதி வழங்குகிறது. ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், அவர் நேரில் ஆஜராவதில் பல பிரச்னைகள் உள்ளன. அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *