தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் – நல்லகண்ணு

தூத்துக்குடி: ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் மையத்தில் வைத்து நடந்தது.

இதில் கலந்து கொண்ட இகம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சேவுக்குதான் விசுவாசமாக உள்ளனர். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது. இகம்யூ கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கவுரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கடைசி பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராட விடாமல் மக்கள் சாதி, மதம், மற்றும் இனத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தாது மணல் விற்று இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார். தாது மணல் உள்ளிட்ட கனிம வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க தவறினால் வருங்கால வாரிசுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் நல்லகண்ணு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *