பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை: தமிழருவி மணியன்

சென்னை: பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை சென்று சேரும். எனவே, கருணாநிதி கூறினார் என்பதற்காக அலட்சியமாக இல்லாமல் மோடி அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயலலிதா பெரியார், அண்ணா போன்றோருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாற்றுக் கருத்தில்லை…

அறிஞர் அண்ணாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஈடு இணையற்ற பேச்சாளராய், வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகளைக் கொண்டு கவிதை நடையில் தனித்துவத்துடன் எந்தக் கருத்தையும் எழுத்தில் எளிதாய் வடிக்கும் ஆற்றல் மிக்க எழுத்தாளராய்ப் பெரும் புகழ் பெற்றவர் அண்ணா. நாடு சுதந்திரம் பெற்றதும் ஆகஸ்ட் 15 துக்கதினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று பெரியார் கூறியபோது, அதை மறுத்து இன்பநாளாகக் கொண்டாட வேண்டும், தான் ஏற்றுப் போற்றிய தலைவருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அண்ணா.

அரிய பண்பாளர்…

பெரியாரின் பாதிப்பில் பிரிவினைவாதியாகத் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய அண்ணா காலநடையில் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டார். தமிழகத்தின் முதல்வராக மிகக் குறைந்த நாட்களே பதவியை அலங்கரித்தவர், பொதுவாழ்க்கைப் பண்புகளைப் பழுதுபடாமல் பராமரித்துப் பாதுகாத்தார். இன்றைய அரசியல்வாதிகளிடம் பற்றிப் படர்ந்திருக்கும் ஊழல், வாரிசு அரசியல், சொத்துக்குவிப்பு, ஆடம்பர ஆரவாரம் போன்ற நோய்கள் தன் மீது படிந்துவிடாதபடி பார்த்துக் கொண்ட அண்ணா தன் வாழ்க்கை முழுவதும் நேர்மையும், எளிமையும் துலங்க நம்சமூக வீதிகளில் வலம் வந்த அரிய பண்பாளர். எல்லாவற்றையும் மேலாக, மதுவிலக்குக் கொள்கையில் காந்தியப் பாதையில் தடம் பதித்து நடந்த அண்ணா, அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு மதுக்கடைகளைத் திறக்க இறுதிவரை முன்வரவில்லை.

பாரத ரத்னாவிற்குப் பொருத்தமானவர்…

அண்ணா அறத்துக்குப் புறம்பாகப் பொதுச் சொத்தில் பத்துப் பைசாவையும் தன் குடும்பத்திற்குச் சேர்த்து வைக்க விரும்பாதவர்; தன்னுடைய ஆளுமையைப் பயன்படுத்தி வாரிசு அரசியலை வளர்த்தெடுக்காதவர்; தன் ஆட்சிக்காலத்தில் ஊழலின் நிழல் கூடப் படிந்துவிடாமல் முடிந்தவரை பார்த்துக் கொண்டவர்; “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்ற பார்வையுடன் அனைத்து அரசியல் தலைவர்களையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்தவர்; மதுவிலக்குக் கொள்கையை உயிராய் மதித்தவர். பாரத ரத்னா விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.

எங்கள் விருப்பம்…

தமிழகத்தில் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களுக்குப் ”பாரத ரத்னா” விருது தகுதிக்கு மீறிய பெருமை சேர்த்தது. பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை சென்று சேரும். கலைஞர் கருணாநிதி முன்மொழிந்தார் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா மௌனப் பார்வையாளராக இல்லாமல், மோடி அரசின் மீது தன் செல்வாக்கைப் பயன்படுத்திப் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கு வழிகாண வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் விருப்பமாகும்’ என இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *