கலை

வாழ்வின் மிக விரிந்த – உயர்ந்த ஆழ்ந்த கருத்துக்களை உணர்ச்சிகளைக் கண்டறிய அதுவும் சாளரப் பாதைகள் போன்றவை, கலைக் கூடங்களும் பொருட்காட்சி சாலைகளும்.

கலைஞர்களுக்குப் பயிற்சி தேவை. ஆனால் இந்தப் பயிற்சி, இயல்பாக உள்ள திறமையைக்குறைப்பதாக – சம்பிரதாய முறைகளை மட்டும் கற்பிப்பதாக இருக்குமானால், கலையே அழிந்து போகும். கலை, இலக்கியக் கழகங்கள், இயல்பாக உள்ள ஆக்க சக்தியை வளர்க்கின்ற பயிற்சியைத் தருகின்ற வேலையை மேற்கொள்ள வேண்டும் அரசாங்கத்தில் தலையீடு இதில் இருக்கக்கூடாது.

கலை மனித வாழ்வின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடி ஆகும்.

எத்தனையோ வகைப்பட்ட செயல் திட்டங்கள் இருந்தாலும் கலையும் – இலக்கியமுந்தான் ஒரு நாட்டின் இதயத்தில் புதிய உணர்வைப் பெய்கின்றன.

வாழ்க்கை ஒரு விசித்திரமான கலவை. முதலில் நாம் வாழவை அதன்நிலையிலேயே வைத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அது மேம்பாடடைய வழி செய்ய வேண்டும்.

விண்ணையம் மண்ணையும்விட விசித்திர மானது மனிதனுடைய மனமும் உணர்வும், இந்த மனித மனமும் உணர்வும் நாளும் உரம் பெற்று வளர்கின்றன – புதிய புதிய உலகங்களை வெற்றி கொள்ள முயல்கின்றன.

சுதந்திரம் இல்லாத மண்ணில் கலையும் அழகும் எப்படிக் கனிய முடியும். அடிமை இருளில் அந்தகாரத்தில் அவை வாடி வதங்கி வடுகின்றன.

நமது நாட்டின் மக்கள் தொகையில் படித்தவர்கள் இருபது சதவிகிதம் என்ற எண்ணிக்கையானது, உலகில் உள்ள பல நாடுகளில் மொத்த ஜனத்தொகையைக் காட்டிலும் மிக அதிகமானதாகும். அப்படியிருந்தும் நமது எழுத்தாளர்களின்படைப்புகள் நம் மக்களின் இதயத்தைத் தொடவில்லையே ஏன்? எழுத்தாளன் தன்னுடைய இலக்கிய வட்ட்தை விட்டு வெளியே வந்து மக்கள் நிலையிலேயே தன்னை வைத்துப் பார்த்து, அவர்களுக்கு எது ஏற்றது – இதமளிக்கக் கூடியது – விரும்பி வாசிக்கத் தக்கது என்று ஆராய்ந்து பார்த்து எழுத வேண்டும். அப்போதுதான் அவனுடைய எழுத்துக்கள் பரவும். புத்தகங்களும், பத்திரிக்கைகளும் வளரும்.

வாழ்வென்னும் ஜீவந்தி நிற்காது ஓடிக் கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் நமது அற்ப ஆசைகளையும், எண்ணங்களையும் லட்சியம் செய்யாமல் அசுர வேகத்தோடு ஓடி வரும்! அது, பெருந்துன்பத்தையும் உண்டாக்கி விடுகிறது.

வெளி உலகத்தை மனித மனம் வெற்றி கொண்டு ஆள்வதைப் போலக் குறிப்பிடத் தகுந்த ஒன்று இன்று வேறு எதுவும் இல்லை. இந்த வளர்ச்சி இன்று துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அவனுடைய ஆன்மீக வளர்ச்சியும், தன்னை அடக்கியாளும் திறமை வெகுவாகக் குறைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே புற உலகை வெற்றி கொள்ளும் அவன் தன்னைத்தானே வென்றாளத தவறி விடுகிறான்.

உலகம் மாறிக்கொண்டு வருகிறது. நேற்றைய உண்மைகள், அதற்கு முந்திய கோட்பாடுகள் இப்போது அர்த்தமற்றவையாகிவிடும். மாறாமல் இந்த உலகில் நிலையாக இருப்பது ஒன்றுமில்லை. நாளுக்கு நாள், விநாடிக்கு விநாடி உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. உயிரற்றவைகள்தான் ஒரு வளர்ச்சியம் இல்லாமல் ஓய்ந்து கிடக்கின்றன. உலகில் மற்றவை மாற்றம் அடைந்து கொண்டுதான் வருகின்றன. எப்படி ஓடிவருகிற புது வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினால், அது தேக்கநிலை பெற்று விடுகிறதோ, அதைப் போலவேதான் மனிதனுடையவும் – நாட்டினுடையவும், வாழ்வில் மாற்றம் – வளர்ச்சி இன்றேல் அவையும் தேங்கிக் கிடக்க நேர்ந்து விடும்.

கொஞ்சம் அழகுணர்ச்சி, கற்பனைத் திறம், கலையார்வம் இருந்துவிட்டால் போதும். மண குடிசையைக் கூட மனமோகன மாளிகை ஆக்கி விடலாம். ஆனால், இந்தக் கலையார்வம், கற்பனைத் திறமும், அழகுணர்ச்சியும் இல்லையென்றால் மிகப் பெரிய மாளிகைக்கூட பயங்கரப் பொருளாகத் தோன்றும்.

நம்முடைய கலைஞர்கள் இன்று இரண்டாந்தரமானவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும், கலைஞர்களும், சிற்பிகளும், மேதைகளாக இருக்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும், கலை இலக்கியக் கழகங்கள் தங்கள் படைப்புக்களில் சிறந்த சாதனைகளை உருவாக்க வேண்டும்.

மனித சமுதாயத்தின் நலனுக்கு மனிதன் உழைக்கின்ற – பாடுபடுகின்ற இடர்கள்தான் தொழுகைக்குரிய கோயில்கள்.

இயற்கை அழகிலே ஈடுட்டுத், தன்னை மறந்து கனவுலகிலே சஞ்சரிப்பது சுலபமானதுதான். ஆனால் இப்படி மற்றவர் படும் துண்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல்: அடுத்தவர்களின் சுகதுகங்களில் அக்கரை காட்டாமல் வாழ்வது என்பது உள்ளத் திண்மையோ, ஒப்புரவோ ஆகாது. தூய கனவுகளும், கற்பனைகளும், எண்ணங்களும் நல்ல செயல்கள் மூலம வெளிப்பட வேண்டும்.

வாழ்வென்பது மனிதனுக்கெதிராக மனிதன் நடத்துகின்ற இடைவிடாத போராட்டம் ஆகும்! சூழ்நிலைகளை எதிர்த்து, பௌதீக, ஆன்மீக, நற்சிந்தனைகள் நிலைபெற மனிதன் நடத்தும் இந்தப் போரினால் புதிய கருத்துகள் உருவாகின்றன. நல்ல தத்துவங்கள் பிறக்கின்றன.

தலைமுறை தலைமுறையாக மனித இனத்தை எதிர்நோக்கிய கேள்வி: ‘வாழவின் குறிக்கோள் என்ன?’ – என்ற அதே கேள்வி இன்று நம்மையும் எதிர் நோக்கியுள்ளது. வாழ்வின் இன்றைய பல பிரச்சினைகளுக்குப் பதில் கூற முடியாத, பழங்கால நம்பிக்கைகள் நமக்குப் போதுமானவையாக இல்லை! மாறி வரும் உலகின் புதிய மாற்றங்களுக்கேற்பத் தானும் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதாக வாழ்க்கை முறை அமைய வேண்டும். இப்படி மாற்றங்களோடு ஒத்துப் போகாத வாழ்க்கை முறைகளால் குழப்பமே உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *