காந்தி

காந்தியடிகள் இந்தியாவின் தோற்றத்தையே மாற்றியமைத்த பெருமைக்குரியவர். தாழ்ந்து கிடந்த மக்களை தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். பாமர மக்களை விழிப்படையச் செய்தார். இந்திய மக்களின் பிரச்சினையை உலகின் பிரச்சினை யாக்கினார். அகிம்சை, ஒத்துழையானை – சட்ட மறுப்பு போன்ற புதிய போர் முறைகளை உலகுக்களித்த பெருமை காந்தியடிகளையே சாரும்.

காந்தியடிகளின் உடல் குச்சிப்போல் மெலிந்தது – அவருடைய உள்ளமோ எஃகைப் போல் வலிவுடையது. பாறைபோல் உறுதியானது. அவருடை தோற்றம் எளிமையானது- குரல் மென்மையானது. என்றாலும், காண்பவர் எரையும் பணிய வைக்க வல்லது – கேட்பவரை உணர்ச்சி வசப்பட வைப்பது. அளவற்ற ஆற்றிலின் இருப்பிடமாக காந்தியடிகள் இருந்தார்.

துயரத்திலே இந்தியா துடித்துக் கொண்டிருந்த போது, காந்தி புதிய தென்றலைப்போல வந்தார். அந்தப் பூங்காற்றால் நாம் புதிய உற்சாகத்தைப் பெற்றோம்! இருளைக் கிழித்துக்கொண்டு வரும் ஒளிச் சுடராய் காந்தி வந்தார். அந்த ஒளியிலே நம் கட்புலனை மறைத்திருந்த திரை விலகியது. சுழற்றி அடிக்கும் சூறாவளிக் காற்றைப் போல அவர் ஏழை மக்களின் இதயங்களை மாற்றியமைத்தார். அவர் மேலே இருந்து குதித்துவிடவில்லை. இந்த நாட்டின் கோடான கோடி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி வாதாட, அவர்கள் மொழியிலேயே பேசும் ஒருவராகே காந்தி இருந்தார்.

காந்தியடிகள் மறைந்து விட்டார். நம்மை விட்டு ஒளி போய்விட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. நான் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாது திகைக்கிறேன். நம்மை விட்டு ஒளி போய் விட்டது என்று நான் சொன்னது கூடச் சரியில்லை. ஏனெனில், இதுவரை இந்த நாட்டுக்கு ஒளியேற்றிக் கொண்டிருந்த அது சாதாரண ஒளியல்ல. இது வரையிலும் மட்டுமல்ல; எதிர்காலத்திலும், இனிவரும் எண்ணற்ற ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஒளி இந்த நாட்டிலே தோன்றி, எண்ணற்ற மனிதர்களின் மனத்திலே சாந்தியைப் பொழியும் – அதை உலகம் பார்க்கத்தான் போகிறது. நிசத்தின் – நித்தியத்தின் பிரதி நிதியாக அந்த ஒளிதான், நம்மைத் தவறில் இருந்து திருத்தி நல்ல வழிக்கு அழைத்துச் சென்றது. பழம்பெரும் நாடு – இதற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *