அலெக்சாண்டர் டூமாஸ்

எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ்

வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200 புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால் கூட இந்த எண்ணிக்கையைத் தொட இயலாதே! என்று எண்ணலாம்.

ஆனால் இந்த அதிசயத்தை ஒரு எழுத்தாளர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

அவர்தான் இன்றுவரை ‘உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுகிறார்.

உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின் மூலம் சம்பாதித்தவர் இவர்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அவர்தான் அலெக்சாண்டர் டூமாஸ்.

நெப்போலியனின் குதிரைப்படை வீரனுக்கும், படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் வில்லர்க காட்டரட்சு என்ற கிராமத்தில் 1802 ஜூலை 24-ல் பிறந்தார்.

போர் வீரன் என்பதால் டூமாஸின் தந்தை உலகின் பல பாகங்களுக்கும் செல்கின்ற வாய்ப்பைப் பெற்றார். ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று வந்ததும் தன் மகன் டூமாசை அழைத்து, தாம் சென்று வந்த நாடுகள்; அந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள்; அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அங்கு தோன்றிய எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அந்த நூலின் வழியாக அந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியெல்லாம் விவரிப்பார்.

குறிப்பாக பேனாவின் சக்தியையும், எழுத்தின் வலிமையையும் டூமாசுக்கு கதை போன்று தந்தை சொல்வார். இதுதான் டூமாஸின் வெற்றிகளுக்கு அடிப்படை ஆயிற்று.

டூமாஸின் நான்காவது வயதில் அவருடைய தந்தை இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியது. அன்புத் தந்தையை இழந்த சோகமும், வறுமையும் சேர்ந்து டூமாஸை வேதனையில் தள்ளியது.

டூமாஸின் தாய் தன் மகனைப் படிக்க வைக்க ஆசைப்பட்டாள்.

ஆனால் டூமாஸோ குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிந்தித்ததார். அம்மவிற்குத் தெரியாமல் காட்டுக்குள் சென்று பறவைகளை வேட்டையாடினார். பழங்களைச் சேகரித்தார். கிடைத்த பறவைகளையும், பழங்களையும் அம்மாவிடம் கொடுத்து, அவள் மகிழ்வாள் என்று எதிர்பார்த்தார்.

படிக்க வேண்டிய வயதில் வேட்டையாட தன் மகன் செல்கிறானே என்று தாய் வேதனைப்பட்டாள்.

மகனை பாதிரியாராக்கினால், குடும்பத்திற்கு நல்ல வருமானம் வரும் என்று எண்ணிய டூமாஸின் தாய், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாள்; பாதிரியாரின் வாழ்க்கை பிடிக்காததால் மூன்று நாட்கள் வீட்டிற்கே வராமல் காட்டிலேயே வாழந்தார் டூமாஸ். கெஞ்சிக் கூத்தாடி மகனின் மனதை மாற்றி பள்ளிக்கு தாய் அனுப்பினாள்.

பஃபான் என்பவர் நூலையும், பைபிளையும், இராபின்சன் கரூசோ, ஆயிரத்து ஓர் இரவு கதைகள் ஆகியவற்றை டூமாஸ் ஆவலோடு படித்தார்.

ஆயிரத்தோர் இரவு கதைகளில் உள்ள வர்ணனைகள் டூமாஸை மிகவும் கவர்ந்தது.

ஆரம்பத்தில் ‘மேய்ட்டர் மென்சன்’ என்ற வழக்குரைஞரிடம் உதவியாளராக டூமாஸ் சேர்ந்தார். அப்போது அடாலே டால்வின் என்ற பெண்ணை அலெக்சாண்டர் டூமாஸ் காதலித்தார். ஆனால் இந்தக் காதல் வெற்றி பெறவில்லை. சிறிது காலத்தில் இந்த வேலையை விட்டு விலகினார்.

1823 – ஆம் ஆண்டு டூமாஸ் பாரிசுக்குச் சென்றார். எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை நகல் எடுக்கும் பணி கிடைத்தது. இதன் மூலம் போதுமான வருமானம் அவருக்குக் கிடைத்தது.

அப்போது எதிர்வீட்டில் வாழ்ந்த கணவனை இழந்த காதரின்லியே என்பவளைக் காதலித்து டூமாஸ் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

டூமாஸ் எழுதிய நாடகம் ‘மூன்றாம் ஹென்றி’ இந்த நாடகம் அவருக்கு பெருமையைத் தேடித் தந்தது.

‘அண்டோனி’, ‘மூன்று கத்தி வீரர்கள்’ போன்ற படைப்புகள் டூமாஸின் எழுத்தாற்றலுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

பிரான்ஸ் நாட்டு அதிபர்களின் கோழைத்தனங்களையும் சீமான் சீமாட்டிகளின் காதல் லீலைகளையும், அவர்களது ஆடம்பரப் போக்குகளையும் ஒட்டு மொத்தத்தில் மேல்த்தட்டு வர்க்கத்தின் போலித்தனமான வாழ்க்கைகளையும் டூமாஸின் படைப்புகள் வெளிப்படுத்தின.

தொடர்ந்து டூமாஸ் எழுதிக் குவித்தார்.

அவருடைய எழுத்துக்கள் மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றது.

புகழும் பணமும், போட்டி போட்டுக் கொண்டு டூமாஸிடம் வந்து சேர்ந்தன.
இதைச் சகித்துக் கொள்ள இயலாத பொறாமையாளர்கள், “டூமாஸ் பணம் கொடுத்து, பலரை தமது வீட்டில் வைத்து எழுதி, அதை தமது பெயரில் வெளியிடுகிறார்” என்று பிரச்சாரம் செய்தனர்.

பொய்ப் பிரச்சாரங்களை எல்லாம் நிர்மூலமாக்கிய டூமாஸை, அவருடைய பெண் மோகம் வீழ்த்தத் தொடங்கியது.

நாவல்களை நீளநிறத்தாள்களிலும்; கவிதைகளை மஞ்சள் நிறத்தாள்களிலும்; கட்டுரைகளை ரோஜா நிறத் தாள்களிலும் எழுதுவதை வழக்கமாகக் கொண்ட டூமாஸை, உயரம் குள்ளம், கருப்பு, சிவப்பு என பல வண்ணப் பெண்களின் அழகு ஆட்டிப் படைத்தது.

அதனால் மனைவியும், மகனும் டூமாஸை விட்டுப் பிரிந்தனர். அந்தப் பிரிவு டூமாஸின் காதல் விளையாட்டிற்கு வாய்ப்பாயிற்று.

எப்போதும் மங்கையர் மத்தியிலேயே டூமாஸ் காலம் தள்ளினார்.

மங்கையர் அழகில் டூமாஸ் மனதைப் பறிகொடுக்க, அந்த மங்கையர் டூமாஸ் வீட்டில் இருக்கும் பொருட்கள் மீது கண் பதித்தனர்.

ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு பெண்ணும் எடுத்துச் சென்றனர்.

இறுதியில் அனைத்தையும் டூமாஸ் இழந்து நின்றார்.

‘கலையின் சிகரம்’ என்று பெர்னாட்சாவினால் அழைக்கப்பட்ட டூமாஸ்;

கரிபால்டியின் நண்பனாகத் திகழ்ந்த டூமோஸ்,

எழுதிக்குவித்த டூமாஸ்;

எழுத்தின் வழியாக பெரும் பணம் சம்பாதித்த டூமாஸ்;

இறுதிக்காலத்தில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்தார். ஆடைகளை விற்று வாழ்ந்தார். 1870 டிசம்பர் 5-ல் இந்த உலகை விட்டு அலெக்ஸாண்டர் டூமாஸ் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *