ரூஸோ

இலக்கிய மேதை ரூஸோ!

‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற தாரக மந்திரங்களை ஒரு எழுத்தாளன்தான் தன் படைப்புகளின் வழியாக உலக மக்களுக்கு விட்டுச்சென்றான்.

இந்தச் சிந்தனை மக்களை எழுச்சி கொள்ளச் செய்ததுடன், ஒரு புரட்சிக்கும் வித்திட்டது. அதுதான் பிரெஞ்சுப் புரட்சி!

வாழும்போது வறுமையோடு போராடினான்; எழுத்துக்களால் இறுதிக் காலத்தில் ஓரளவு பேசப்பட்டான்; மறைந்த போது சராசரி மனிதனாகக் கருதப்பட்டு, சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டான்.

ஆனால் அவன் மறைந்து பதினாறு ஆண்டுகள் முடிந்த பின், அந்த எழுத்தாளனுக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்தது. புதைக்கப்பட்ட அவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் அலங்கரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்க, பிரபுக்களை மட்டுமே புதைக்கப்படும் மயானத்தில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. உலக எழுத்தாளர்களில் இவனுக்கு மட்டுமே இந்தச் சிறப்புக் கிடைத்தது.

அவன் பெயர் ரூஸோ!.

ரூஸோவின் தந்தை ஐசக் ரூஸோ, தாய சூசான் பெர்னாட்.

1712 ஜூனில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜினிவா நகரில் ரூஸோ பிறந்த நாள். ரூஸோவின் முழுப்பெயர் ‘ஜூன் ஜாக்ஸ் ரூஸோ’.

ரூஸோ பிறந்த சில மணி நேரத்தில் தாய் மறைந்தார். தாயை இழந்த ரூஸோ, தந்தையின் கண்கானிப்பில் வளர்ந்தான்.

ரூஸோவின் அறிவுப் பசிக்குத் தந்தை வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் கடிகாரம் பழுது பார்க்கும் ஒரு தொழிலாளியாக இருந்தும் மகனின் வளர்ச்சிக்காக மிகவும் உழைத்தார்.

இங்கிலாந்து படைத்தளபதி ஒருவருக்கும், ரூஸோவின் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் சிறை செல்ல வேண்டியதிருக்கும் என்பதை அறிந்த ரூஸோவின் தந்தை நாட்டை விட்டு ஓடினார்.

தாய் மரணம்..

தந்தையும் நாட்டை விட்டு ஓடுதல்….

இறுதியில் சிற்றன்னையின் உதவியால் ரூஸோ வளர்ந்தார். வீட்டிலிருந்தபடியே ஓவியம் வரைவதற்கும், கணிதத்தில் தேர்ச்சி பெறுவதற்கும் சிற்றன்னை உதவி செய்தாள்.

லாம் பெர்சியா என் பாதிரியார் ரூஸோவின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார் லத்தீன் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். லத்தீன் மொழி இதிகாசங்கள், உலக இலக்கியம், வரலாற்றுச் செய்திகள், கதைகள், காவியங்கள், கிரேக்க – ரோமானிய வீரர்களின் வீரச் செயல்கள் ஆகியவற்றை எல்லாம் ரூஸோ கற்றுத் தேர பாதிரியார் பெர்சியா வழிகாட்டினார்.

பதினான்காம் வயதில் ரூஸோ, மாஸாரன் என்ற வழக்குரைஞரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை நகல் எடுப்பது ரூஸோவின் பணி. ஆனால் மாஸாரானின் அடிமைப் போக்கும், ரூஸோவை நடத்தும் விதமும் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலையைத் தூக்கி எறிந்த ரூஸோ வெளியேறினார்.

சுய சிந்தனையோடு வாழ வேண்டும் என்ற ரூஸோவை, வறுமை மீண்டும் ஒரு வேலையைத் தேட வைத்தது.

டூகோமான் என்ற சிற்பியிடம் ரூஸோ வேலைக்குச் சேர்ந்தார். இங்கும் ரூஸோவை மனிதனாக நடத்த டூகோமான் விரும்பவில்லை. அடிமையைப் போன்று, இட்ட பணியைச் செய்யச் சொல்வதும், அதில் ஏதாவதொரு தப்பு நடந்தால் காட்டுமிராண்டித்தனமாகத் தண்டிப்பதும் நடந்தது. இந்த வேலையிலும் ரூஸோவுக்கு வெறுப்பே ஏற்பட்டது.

‘ஒருவனைச் சார்ந்து வாழ்வதை விடச் சாவதே மேல்’ என்ற கொள்கை கொண்ட ரூஸோ, இந்த வேலையில் இருந்தும் வெளியேறினார்.

மீண்டும் ரூஸோவை வறுமை மட்டுமே வரவேற்றது…. அனாதையாக அலைந்தார்… அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியின்றி பசியுடன் வீதியிலேயே கிடந்தார்…

அப்போது பான்தெவா என்ற பாதிரியார் ரூஸோவிற்கு அடைக்கலம் கொடுத்தார். அதனால் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ரூஸோ சேர்ந்தார். மதம் மாறிய பின்பும் ரூஸோவின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படவில்லை.!

ரூஸோவின் நிலைமையை அறிந்த மேடம் பேசில் என்ற் பணக்காரப் பெண்மணி, அருகு வேலை கொடுத்தார். மேடம் பேசிலின் கணவன் வெளிநாடு சென்றிருந்ததால் குமாஸ்தா ஒருவனின் பாதுகாப்பில் அவள் இருந்தாள். ரூஸோவின் செயல்கள் பேசிலை அவர்மீது பரிவு காட்டச் செய்தது.

மேடம் பேசிலின் கணவன் வந்ததும், அவரிடம் ரோஸோவிற்கும் மேடம் பேசிலுக்கும் தகாத தொடர்பு இருப்பதாக குமாஸ்தா கதை கட்டினான். அதை மெய்யென நம்பிய மேடம் பேசிலின் கணவன், ரூஸோவை வேலையில் இருந்து நீங்கினான்…

மீண்டும் ரூஸோவை வறுமை சொந்தம் கொண்டாடியது.

ஆனால் எப்போதும் ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்பதே அவருடைய பணியாயிற்று.

சாலை, சோலை, கடற்கரை, நூலகம், பேருந்து நிலையம், கழிப்பறை போன்ற இடங்களிலெல்லாம் ரூஸோ ஏதாவது ஒரு புத்தகத்துடனேயே இருந்தார்.

அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம்.

புதுமைகளைப் படிக்க வேண்டும்; புதுமைகளைப் படைக்க வேண்டும்; புதியவைகளைச் சிந்திக்க வேண்டும்; புதிய புதிய செய்திகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றுக்கெல்லாம் நூல்களே ஆசான்.

அதிலிருந்து கற்றுக்கொண்டு, நாம் மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே ரூஸோவின் சிந்தனையை ஆக்ரமித்திருந்தன. அதனால்தான் எப்போதும் புத்தகமும் கையுமாக ரூஸோ அலைந்தார்.

ஒருமுறை ரூஸோ ஒரு புத்தகத்தை ஒரு புத்தகக் கடையில் பார்த்துவிட்டார். அந்த நூலை வாங்க வேண்டும்; வாங்கிப் படிக்க வேண்டும்; அதிலுள்ள செய்திகளை மனதில் பதிந்து கொள்ள வேண்டும். அது பிற்காலத்தில் தமக்கு கை கொடுக்கும் என்று ரூஸோ எண்ணினார்.

அவரால் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கத்தான் முடிந்தது. வாங்குவதற்குக் கையில் காசில்லை. யோசித்தார். சிறிது நேரத்தில் ரூஸோ விரும்பிய புத்தகம் அவர் கையில்! இந்த அதிசயம் எப்படி நடந்தது?

தனது உடைகளை விற்று, அதன் மூலம் வந்த காசில் அவர் விரும்பிய புத்தகத்தை ரூஸோ வாங்கிவிட்டார். இனி இரண்டு நாட்களுக்கு சாப்பாடு தேவையில்லை.

சாப்பாட்டிற்கு ரூஸோ கையில் காசில்லை என்றாலும், இரவு பகலாக அந்த நூலை படிப்பதிலேயே ரூஸோவின் கவனம் சென்றது. அவருக்கு சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை வரவில்லை.

வறுமை ரூஸோவை வாட்டியது. என்னதான் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் உணவின்றி எத்தனை நாட்களுக்கு பட்டினி கிடப்பது? அதனால் நாட்டை விட்டு வெளியேறினார். இத்தாலி நாட்டிற்குச் சென்றால் தமது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் எண்ணத்தோடு இத்தாலி சென்றார். இங்கும் அவரை வறுமை வாட்டியது.

இந்த வேளையில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த டிபான்ட் லென் என்ற பாதிரியாரை ரூஸோ சந்தித்தார். ரூஸோ புராடெஸ்டன்ன் பிரிவைச் சேர்ந்தவர்.

ரூஸோவின் அறிவாற்றலையும், திறமையையும் கண்ட பாதிரியார், மதப் பிரிவுகளைக் கடந்து ரூஸோவை நேசிக்கத் தொடங்கினார்.

இந்தப்பாதிரியாரின் தொடர்பு ரூஸோவுக்கு நம்பிக்கை கொடுத்தது. பாதிரியார் ரூஸோவை லாரன்ஸ் என்ற பணக்காரப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினார்.

லாரன்ஸ், ரூஸோவின் திறமையையும், பல துறையில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கண்டு வியந்தார். ரூஸோ கல்வி கற்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் லாரன்ஸே ஏற்றாள்.

ரூஸோவின் ஆற்றலுக்கும், எதிர்கால வெற்றிகளுக்கும் சிறந்த இடம் பாரீஸ்தான் என்று லாரன்ஸ் முடிவு செய்து, ரூஸோவை அங்கு அனுப்பி வைத்தாள்.

ரூஸோவின் பிற்கால வெற்றிகளுக்கெல்லாம், இந்த லாரன்ஸ்தான் அடித்தளமிட்டாள். இவள்மட்டும் ரூஸோவிற்கு கைகொடுக்கவில்லை என்றால், இன்னும் சில ஆண்டுகாலம் ரூஸோ வறுமையோடு போராட வேண்டியது ஏற்பட்டிருக்கும்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னரும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது ரூஸோவின் வாழ்க்கையிலும் உண்மையானது.

1743-ல் திரேஸா என்ற பெண்ணை ரூஸோ மணந்தார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார். ஆனாலும் வறுமை ரூஸோவின் குடும்பத்தை வதைத்தது. அதனால் தமது மூன்று குழந்தைகளையும் ரூஸோ அநாதை விடுதியில் சேர்த்தார்.

இசையில் இசையில் புதிய புதிய பரிணாமங்களை ரூஸோ ஆராய்ந்தார். இவருடைய ஆராய்ச்சிக்குப் பாரீஸ் இசைக் கழகம் சான்றிதழ் கொடுத்துப் பாராட்டியது. முதன் முதலாக ரூஸோ பராட்டப்ப பெற்றது இங்குதான்.

கலை, இலக்கியம், த்த்துவம் ஆகிய மூன்றிலும் மேதையாகத் திகழ்ந்த பாதிரியார் டிடேரோவின் தொடர்பு ரூஸோவிற்குக் கிடைத்தது. இந்தத் தொடர்பு ரூஸோவிற்கு பல சாதனைகள் படைக்கக் காரணமாயின.

கலைகளும் விஞ்ஞானமும் வளர்ந்ததால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா? அல்லது தாழ்ந்துள்ளதா? என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதும்படி ஜோன் கலைக்கழகம் ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருந்தது. இதைக் கண்ட ரூஸோ இந்தக் கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்காக இரவு பகலாக இசை நூல்களைப் பயின்று ஆய்வுகளில் ஈடுபட்டார். இதுபற்றிய தமது கருத்துக்களை பாதிரியார் டிடேரோவிடம் விவாதித்தார்.

கட்டுரை கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. ரூஸோவின் கட்டுரைக்கு கலைக்கழகத்தின் பரிசு கிடைத்தது. இந்த வெற்றி ரூஸோவின் வளர்ச்சிக்கு வழி காட்டின. ரூஸோவின் புகழ் மெல்ல பரவத் தொடங்கியது.

1756-ல் ‘மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏற்பட அடிப்படக்காரணம் என்ன? இயற்கை நியதி அதனை ஒப்புக் கொள்கிறதா?’ என்ற தலைப்பில் ரூஸோ எழுதிய கட்டுரைக்கு கலைக்கழகத்தின் சான்றிதழும் பாராட்டும் கிடைத்தது.

தொடர்ந்து இசை நாடகம் ஒன்றை எழுதி, ரூஸோ அரங்கேற்றினார். இந்த நாடகத்திற்கு பிரெஞ்சு அரசின் சேமநிதியும், கவுரவப் பட்டும் கிடைத்தது.

இது பற்றி பொறாமையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியதால், பரிசையும் பாராட்டையும் ரூஸோ பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

1760-ல் வெளிவந்த ரூஸோவின் ‘ஜூலி’ என்ற நூல் பாரீசு மக்களிடத்தில் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

1762-ல் ‘எமலி’ என்ற தலைப்பில் வெளிவந்த ரூஸோவின் நூல் புகழின் உச்சிக்கு அவரைக் கொண்டு சென்றது. ரூஸோவின் வெற்றிகளை ஜீரணிக்க இயலாதவர்கள் ‘எமலி’ சமயக் கொள்கைக்கு எதிரானது என்ற பிரச்சாரத்தைக் கிளப்பினர். பாரீஸ் நீதிமன்றத்திலேயே ரூஸோவின் ‘எமலி’ என்ற நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

பிரெஞ்சு பாராளுமன்றம் ‘எமலி’ நூலைத் தடை செய்தது. அதன் ஆசிரியர் ரூஸோவைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி ஆணை இட்டது. இரவோடு இரவாக ரூஸோ பாரீஸ் நகரை விட்டு வெளியேறினார்.

இலக்கியத்தில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாட்டையும் , அதற்காகத் தாம் எடுத்துக்கொண்டு முயற்சிகளையும், தமது இலக்கியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களால், தமக்கு ஏற்பட்ட இன்னல்களையும், எதிர்கால மக்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எதிர்கால எழுத்தாளர்கள் தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களையெல்லாம் எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவும் ரூஸோ ‘மகாக் கடிதங்கள்’ என்ற தலைப்பில் 1764-ல் ஒருநூலை வெளியிட்டார்.

‘உரையாடல்கள்’, ‘சிந்தனைகள்’, ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் ரூஸோ எழுதிய நூல்கள், தொடர்ந்து வெளிவந்து மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன. அதே வேளையில் இந்த நூல்கள் ஆளுவோரின் எதிர்ப்பையும் ரூஸோவிற்குத் தேடித் தந்தன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை, தமது படைப்புகளின் வழியாக முழங்கிய ரூஸோ 1778 ஜூலை 2-ல் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *